புதன், 23 அக்டோபர், 2019

வினைத்திறனான கற்றலிற்கான இலகு பொறிமுறைகள் – குறுகிய கருத்தரங்கு



   யா/தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய க.பொ.த சாதாரணதர மற்றும் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு வினைத்திறனான கற்றலிற்கான இலகு பொறிமுறைகள் என்ற தலைப்பிலான குறுகிய கருத்தரங்கு 21.10.2019 அன்று வித்தியாலய மண்டபத்தில் அதிபர் இரா. சிறீநடராசா தலைமையில் இடம்பெற்றது. கருத்தரங்கினை IDM Nelliady Campus நிர்வாக இயக்குநர் திரு ஆர். அரவிந்தன் நிகழ்த்தினார்.

  நிகழ்வில் மாணவர்கள் வினைத்திறனான வகையில் பரீட்சைக்கான கற்கையைக் கற்று சவால் மிகுந்த எதிர்காலத்தை எதிர்கொள்ளத் தம்மைத் தயார்ப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. கருத்தரங்கில் மாணவர்களுக்கான செயற்பாட்டு முறையிலான சிறிய போட்டியும் ஒழுங்கமைக்கப்பட்டு ஊக்குவிப்புப் பரிசில் வழங்கப்பட்டது.நிகழ்வில் நன்றியுரையை ஆசிரியர் சு. குணேஸ்வரன் நிகழ்த்தினார்.

நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்கள்.









திங்கள், 21 அக்டோபர், 2019

தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலய அணி சம்பியனாகியது



   சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரியின் 90 ஆவது ஆண்டு விழாவினை முன்னிட்டு அழைக்கப்பட்ட 21 வயது பாடசாலை அணிகளுக்கு இடையிலான கரபந்தாட்ட போட்டியில் தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலய அணி சம்பியனாகியது.இதன் இறுதியாட்டம் சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இறுதியாட்டத்தில் தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலய அணியை எதிர்த்து புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரி அணி மோதியது.

   முதல் இரண்டு செற்களிலும் ஆதிக்கம் செலுத்திய தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலய அணி 25:21, 28:26 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மூன்றாவது செற்றில் புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரி அணி 25:22 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நான்காவது செற்றில் இரு அணிகளும் தொடர்ந்து பலப்பரீட்சை நடாத்தினர். இதில் தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலய அணி 25:23 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் 3:1 என்ற செற் கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துள்ளனர். மூன்றாவது இடத்திற்கான போட்டியில் இளவாலை மெய்கண்டான் மகா வித்தியாலய அணியை எதிர்த்து சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி அணி மோதியது. இதில் இளவாலை மெய்கண்டான் மகா வித்தியாலய அணி 25:18, 27:25 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தைச் சுவீகரித்துள்ளனர்.




செவ்வாய், 15 அக்டோபர், 2019

சர்வதேச ஆசிரியர் தினம்


      யா/தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தில் சர்வதேச ஆசிரியர் தினம் 05.10.2019 அன்று வித்தியாலய மண்டபத்தில் பாடசாலைச் சமூகத்தினால் முன்னெடுக்கப்பட்டது. வித்தியாலய உயர்தர மாணவர் மன்றத் தலைவர் செல்வன் க. யதுசன் தலைமையில் மேற்படி நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வுக்கு வித்தியாலயத்தின் முன்னாள் ஆசிரியரும் தேவரையாளி இந்துக்கல்லூரியின் ஓய்வுபெற்ற அதிபருமாகிய திரு கி. இராஜதுரை அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார். 

  ஆசிரியர்களுக்கான விளையாட்டுக்களும் ஆசிரியர்களின் கலை நிகழ்ச்சிகளும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. நிகழ்வில் ஆசிரியர்களுக்கான அன்பளிப்புக்களுக்கான அநுசரணையை வித்தியாலய பழைய மாணவர் சங்கச் செயலாளர் திரு சி. சுதந்திரதாஸ் அவர்களும் வித்தியாலய நலன்விரும்பி திருமதி உதயதேவி சண்முகதாஸ் அவர்களும் வழங்கியிருந்தனர். வித்தியாலய அதிபர் இரா சிறீநடராசா, பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்க உறுப்பினர்களின் வாழ்த்துரைகளும் இடம்பெற்றன. நிகழ்வில் பாடசாலைச் சமூகம்  கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கான போட்டிகளை நிகழ்த்தி பரிசில் வழங்கியும் மகிழ்வித்தனர்.