ஞாயிறு, 22 நவம்பர், 2015

இலங்கை வானொலியின் ‘அறிவுச் சுரங்கம்’ வினாடிவினாப் போட்டி



இலங்கை வானொலி வர்த்தகசேவை மற்றும் யாழ் எப்.எம் பாடசாலை மாணவர்களுக்கு இடையில் நடாத்திவரும் “அறிவுச் சுரங்கம்” வினாடிவினா நிகழ்வின் போட்டியும் அதன் ஒலிப்பதிவும் 22.11.2015 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிமுதல் மாலை 4.00 மணிவரை யா/தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய கலையரங்கில் இடம்பெற்றது.

நிகழ்வில் வடமராட்சி வலய பிரதிக்கல்விப்பணிப்பாளர் யோ. ரவீந்திரன், பருத்தித்துறை கோட்டக் கல்விப்பணிப்பாளர் சி. சிறீராமச்சந்திரன், வித்தியாலய அதிபர் இரா. சிறீநடராசா ஆகியோர் மங்கள விளக்கேற்றி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தனர்.

வடமராட்சி வலய பாடசாலைகளில் வல்வை சிதம்பராக் கல்லூரி, தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயம், வேலாயுதம் மகாவித்தியாலயம், ஆழியாவளை தமிழ்க் கலவன் வித்தியாலயம், புற்றளை மகா வித்தியாலயம், பருத்தித்துறை சிவப்பிரகாசம் மகாவித்தியாலயம், அம்பன் அமெரிக்கன் மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலை, உடுத்துறை மகா வித்தியாலயம் ஆகிய 9 பாடசாலைகள் ஒரு கட்டமாகப் பங்குபற்றின.

ஏனைய பாடசாலைகளுக்கு இடையில் மேலும் இடம்பெறவுள்ள போட்டியில் பங்குபற்றுவதற்கு அம்பன் அ. மி. த க. பாடசாலையும், வல்வை சிதம்பராக் கல்லூரியும் தெரிவாகின. அதன்பின்னரே வெற்றி பெறும் அணிகள் தீர்மானிக்கப்படும் என போட்டி ஏற்பாட்பாளர்கள் தெரிவித்தனர்.
நிகழ்வின் இடையே மாணவர்களின் பாடல்களும் இடம்பெற்றன. அணிகளின் சுற்றுக்கள் முடிவடையும் இறுதிநேரத்தில் பார்வையாளர்களுக்கான கேள்விகளும் இடம்பெற்றன. அதில் மாணவர்களும் ஆசிரியர்களும் ஆர்வத்துடன் பங்குபற்றினர். போட்டியில் பங்குபற்றிய மாணவர்களுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

மேற்படி அறிவுச்சுரங்கம் நிகழ்ச்சி வாராந்தம் சனிக்கிழமை யாழ் எப்.எம் 90.1 அலைவரிசையில் நண்பகல் இடம்பெற்றுவருகின்றது. இங்கு பதிவுசெய்யப்பட்ட நிகழ்வுகள் டிசம்பர் மாதம் 12 ஆந்திகதி சனிக்கிழமை முதல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பதிவும் படங்களும் : சு.குணேஸ்வரன் (ஆசிரியர், தொண்.வீ.ம.வித்)